Friday, March 15, 2024

நீதிக்கதை மன்னனின் ஆணவம்

நீதிக்கதை


மன்னனின் ஆணவம்


மகாராஷ்டிரத்தின் பெரு வீரராக விளங்கிய ஒரு மன்னன், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ஈடுபடுத்தி ஒரு அழகான பெரிய கோட்டையைக் கட்டினார். இருந்தாலும் அவர் சிறிது கர்வம் மிகுந்தவர். 


அத்தனை தொழிலாளி களுக்கும் உணவு அளித்தார். அவர்கள் யாவருக்கும் தான் தான் இலவசமாக உணவு அளிப்பதாகக் கர்வம் கொண்டிருந்தார். 


மன்னனின் குருநாதர் இந்த கெட்ட எண்ணத்தைக் கவனித்து விட்டு, மன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினார்.


ஒரு நாள் குரு மன்னனின் அரண்மனைக்கு வந்தபொழுது, வழக்கம் போல் அவனை வானளாவப் புகழ்ந்தார்.


"மகராஜ்! எல்லாப் பணிகளும் தங்கள் கருணையால் தான் நடக்கிறது." என்று கூறினார். அதைக் கேட்டு மன்னனும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். பிறகு குருவானவர், மன்னனிடம் ஒரு கல்லைக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். எதற்காக குரு தன்னைக் கல்லை உடைக்கச்

சொல்கிறார் என்ற சந்தேகம் எழுந்தாலும், மன்னனும் ஆர்வமாக அந்தக் கல்லை உடைத்தார். அட! என்ன ஆச்சரியம் ! அதிலிருந்து ஒரு தேரை துள்ளிக் குதித்துத் தாவித் தாவிச் சென்றது. அந்தக் கல்லிலிருந்து நீரும் வடிந்தது. மன்னன் அதை விநோதமாகப் பார்த்துக் கொண்டே இருந்தார்.


"மன்னா! ஒன்று கேட்கிறேன்.சொல்ல முடியுமா?" என்று குரு கேட்டார்.

"சொல்லுங்கள் குருவே! காத்திருக்கிறேன்" என்றான் மன்னன்.


"மன்னா! இந்தக் கல்லுக்குள் இருந்த தேரைக்கு யார் உணவளித்தார்கள் என்று கூறமுடியுமா?" என்று கேட்டார் குரு .


குரு கேட்ட கேள்வியின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். உடனே வெட்கித் தலை குனிந்தார் மன்னர்.


"குருவே! என்னை மன்னித்துவிடுங்கள். எல்லா வற்றிற்கும் மேலாக இறைவன் என்ற ஒருவன் இருக்கிறான் என்பதை நான் அறிவேன். அவன்தான் இப்படியாக செய்கிறார் என்பதும் உண்மை. 


அவன் தூண்டிவிட்டதினால்தான் நான் யாவருக்கும் உணவுஅளித்தேன். இறைவன் இல்லாது ஒரு செயலும் நிகழாது. என்னை மன்னித்து விடுங்கள். என் கர்வம் அகன்றது" என்று கூறி தான் எல்லாவற்றிற்கும் ஒரு கருவிதான் என்பதை உணர்ந்து கொண்டான்.


நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் செய்யப்படுகிறது. அதற்கு நம்மைக் கருவியாக அமைக்கிறான் இறைவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

Recent Posts

Popular Posts