நீதிக்கதை
செய் நன்றி மறவாதே
கானகத்தில் புள்ளிமான் ஒன்று மகிழ்ச்சியாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது.
வேடர்கள் சிலர் புள்ளிமானைப் பார்த்து விட்டனர். இன்று எப்படியும், இந்தப் புள்ளிமானை பிடித்து விட வேண்டும் என நினைத்தனர். அவர்களும் மான்குட்டியைப் பிடிக்கும்
நோக்கில் தம்மை நோக்கித் தான் வருகிறார்கள் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டது.
நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது. சிறிதும் தாமதியாமல் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளிக் குதித்து ஓடியது. வேடர்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து பின்பற்றி ஓடி வந்தார்கள்.
நீண்ட தூரம் ஓடி வந்துவிட்டது மான்குட்டி. களைப்பு மேலிட மேலும் அதனால் ஓடவும் முடியவில்லை. சற்று இளைப்பாற்றிச் சென்றால் தான் நல்லது எனவும் நினைத்தது.
அதே போல் நின்ற இடத்திலேயே சற்று இளைப்பாறியது. ஆட்கள் வரும் சப்தம் கேட்டு, எழுந்து பார்த்தது. அதே வேடர்கள் தம்மை விடுவதாக இல்லை போலிருக்கிறது.
தொடர்ந்து அயராமல் விரட்டிக் கொண்டும் வந்து விட்டார்கள். பாவம் மான் குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்களே "எப்படித் தப்புவது அவர்களிடம்" என்றும் யோசித்தது.
அதன் அருகில் தாவரங்கள் பசுமையால் வளர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தன. அப்புதருக்குள் நுழைந்து அமைதியாக ஒளிந்து கொண்டது. புதருக்குள் ஒளிந்து
கொண்ட மான் குட்டி அசைவற்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.
அதன் அருகில் ஓடி வந்த வேடர்கள், தொடர்ந்து மானைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் தான், மானுக்கு நிம்மதி வந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்தது. துள்ளிக் குதித்து புதருக்கு வெளியே வந்தது.
புள்ளிமான் குட்டி ஏற்கனவே பசியோடு இருந்தது. அச்சமயத்தில் தான் வேடர்களைப் பார்த்துவிட்டு தலை தெறிக்கவும் ஓடி வந்தது. எனவே அதன் பசிக் களைப்பு நீங்க, அந்தப் புதரிலுள்ள பசுமையான இலைகளையே ருசித்து மேய்ந்து விட்டது.
சற்று நேரத்தில் மானைக் காண முடியாமல், வேடர்கள் வந்த பாதையிலேயே திரும்பினார்கள். வேடர்கள் பார்வையில் படக்கூடாதென, மீண்டும் புதருக்குள் ஓடி ஒளிந்தது மான்குட்டி.
ஆனால், இப்பொழுது அப்புதர் மான்குட்டிக்கு உதவவில்லை. காரணம் புதரில் இருந்த அடர்ந்த பசுமையான இலைகளையெல்லாம் தான், அது தின்று விட்டதே. எனவே, மான்குட்டியை இலைகளால் மறைக்க முடியவில்லை.
அதன் அருகில் வந்த வேடர்கள் கண்களில்
மான்குட்டி தெரிந்தது. அதனால் உடனே தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், வேடர்களிடம் மாட்டிக் கொண்டு மான்குட்டி விழித்தது. "நம் அவசர புத்தியால் தானே, நம் உயிரைக் காப்பாற்றிய இலைகளைத் தின்று விட்டோம்."
"நன்றி மறந்து செய்த செயலுக்கு ஆண்டவன் தண்டனை தந்து விட்டாரே". என எண்ணி கண்ணீர் வடித்தது.
நீதி : செய் நன்றி மறந்தவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.
No comments:
Post a Comment