நீதிக்கதை
சொர்க்கமும் நரகமும்
ஒரு ஊரில் ஒரு மிகப் பெரிய பணக்காரன் இருந்தான். ஆனால் என்ன பயன்? யாருக்கும் ஒன்றுமே கொடுத்து உதவாத ஒரு கருமியாக வாழ்ந்து வந்தான். அவனுக்கு
சொர்க்கத்தையும் நரகத்தையும் காண வேண்டும் என்று மிகுந்த ஆசை.
ஒருநாள் உறங்கும் பொழுது அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனது ஆசை அறிந்து அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார்.
அவர் சொற்படியே அவருடன் சென்றான் அந்தக் கருமி. முதலில் அவனை எங்கு அழைத்துச் சென்றார் தெரியுமா? அவனை நரகத்திற்குக் கூட்டிச் சென்றார். அவர்கள் சென்றபோது அங்கு உணவு உண்ணும் நேரமாக இருந்தது.
பெரிய பெரிய அண்டாக்களில் சாதம், குழம்பு மற்றும் சுவை மிக்க பல பதார்த்தங்களும் யாவும் இருந்தன. அவரவர்களுக்கு சாப்பிட தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு கூட பரிமாறப்பட்டது.
அந்த உணவைக் கண்டவுடன் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது. ஆனால் அந்தோ பரிதாபம்! அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்கவே முடியவில்லை,
தவிர கையை மடக்கி வாய்க்கு அந்த உணவைக் கொண்டு செல்லக் கூட முடியவில்லை. பரிதாபமான நிலையில் அவர்கள் இருந்தார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ?
அறுசுவை உணவு எதிரே இருந்தால் கூட அவர்களால் உண்ண முடியவில்லை. அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது. அனைத்து அண்டாக்களையும் கீழே தள்ளிவிட்டு அவற்றில் உள்ள உணவை வீணாக்கிவிட்டனர். பின்னர் தாங்க முடியாத பசியினால் கீழே உட்கார்ந்து அழுதார்கள். இது தினமும் நடக்கும் சம்பவம்.
பிறகு அந்த பெரியவர் அந்தப் பணக்காரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் அதே போல உண்ணும் வேளைதான்.
நரகத்தில் இருந்தது போலவே அண்டாக்கள் நிறைய அருமையான சாப்பாடுகள் எல்லாம் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்தவர்களுக்குக் கையை நீட்ட முடிந்தது. ஆனால் தங்கள் வாய்க்கு அருகே கொண்டு செல்வதற்காக அவர்கள் கையை மடக்கமுடியவில்லை. நீட்டியபடியே இருந்தது. ஆனால் அவர்களுக்கு உக்தி தெரிந்தது. நீட்ட முடியும் ஆனால் மடக்கத்தானே முடியவில்லை என்று எண்ணி, ஒருவர் தனது நீட்டிய கையினால் இனிப்பு வகைகளை எடுத்து எதிரே இருந்தவர் வாய் அருகில் நீட்டி அவருக்கு ஊட்டினார்.
மடக்கத்தானே முடியாது கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாம் அல்லவா? எவ்வளவு சாமர்த்தியம்? இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் ஊட்டி மகிழ்ந்தனர். அனைவரின் வயிறும் நிரம்பியது. எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இத் தருணத்தில் கருமி கனவில் இருந்து மீண்டான். சொர்க்கம் என்பது தனியே எங்கும் கிடையாது. ஒருவருக் கொருவர் உதவி செய்து வாழ்வதையே சொர்க்கம் என்பதை அவன் புரிந்து கொண்டான்.
யாவருக்கும் பகிர்ந்து உண்ணாமல் தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது தான் நரகம் என்பதையும் உணர்ந்து கொண்டான்.
அன்றிலிருந்து அவன் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தான்.
அதனால் நாமும் பலருக்கு அவர்கள் தேவை புரிந்து பல நன்மைகள் புரிந்தால் நாம் சொர்க்கத்தை இந்த வாழ்விலேயே கண்டுவிடலாம்.
No comments:
Post a Comment